இலங்கை கிரிக்கெட் தேர்தல் தொடர்பில் ஹரீன் கருத்து

இலங்கை கிரிக்கெட் தேர்தல் தொடர்பில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கருத்து

by Staff Writer 04-01-2019 | 10:15 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் தேர்தல் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது டுவிட்டர் கணக்கில் கருத்து பதிவுசெய்துள்ளார். கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கான மேன்முறையீட்டு குழு நியமனம் மற்றும் 2018 செப்டெம்பர் 22 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் குளறுபடி காரணமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். அந்த ஆலோசனைகளின் பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கிரிக்கெட் விளையாட்டின் தற்போதைய நிலை தொடர்பில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கருத்து வெளியிட்டார்.
தேவையற்றவர்கள் குறித்து பேச வேண்டாம். கிரிக்கெட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் சுற்றில் இலங்கை பங்கேற்க வேண்டும். கடந்த காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர்கள், முன்னாள் நிர்வாகிகளின் செயற்பாடுகளை இன்று வீரர்கள் அனுபவிக்கிறார்கள். இந்தத் தேவையற்ற விடயங்களுடன் கிரிக்கெட்டை அழித்திருக்கிறார்கள். விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுடன் நான் கலந்துரையாடினேன். கிரிக்கெட்டை ஒரேயடியாக சரிப்படுத்த முடியாது. எனினும், கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், பல மில்லியன் டொலர் வெளிநாடுகளுக்கு அனுபப்பட்டுள்ளது. இவற்றை ஆராயுமாறு நாம் கோரியுள்ளோம். திருடர்களைக் கண்டுபிடிக்க முடியும். தூள்காரர்கள், பந்தயக்காரர்கள் இதில் இருந்தார்கள் அல்லவா? அந்த அரசாங்கத்தை ஸ்தாபிக்கும்போது இருக்காத மோசடிக்காரர்கள் கடைசி காலத்தில் இணைந்தார்கள். அதன் பலனாகவே கிரிக்கெட் வீழ்ச்சியடைந்தது. அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. நாடு பின்னடைவை எதிர்நோக்கியது. பொதுமக்களின் வாக்கு பலம் இல்லாமல் போனது. மோசடி காரணமாகவே இவை சகலதும் இடம்பெற்றன. எனினும், ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் நாம் ஒன்றிணைந்து நாட்டை மீட்க செயற்படுவோம்
என முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.