ஜனாதிபதி செயலாளரின் சுற்றுநிருபம் அவசியம்

அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கும்போது ஜனாதிபதி செயலாளரின் சுற்றுநிருபத்தைப் பின்பற்றுவது அவசியம் - ஜனாதிபதி

by Staff Writer 04-01-2019 | 5:33 PM
Colombo (News 1st) அரச கூட்டுதாபனங்கள், முதலீட்டுச் சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையை நியமிக்கும்போது, ஜனாதிபதி செயலாளரின் சுற்றுநிரூபத்தை பின்பற்றுவது கட்டாயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர்களை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியபோது, ஜனாதிபதி இந்த விடயத்தை அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அரச கூட்டுதாபனங்கள், முதலீட்டுச் சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபைக்கு நியமிப்பவர்களின் தகைமைகளை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்கும் ஜனாதிபதியால் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது நியமிக்கப்பட்டுள்ள அரச கூட்டுதாபனங்கள், முதலீட்டுச் சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் தகைமைகள் என்பவற்றை ஆராய்ந்து பரிந்துரைக்குமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். அரச வாகனங்களை உரியமுறையில் பயன்படுத்துவது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகிய இணைந்து சிறந்த திட்டமொன்றை வகுக்குமாறும் இதன்போது ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.