அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எவரையும் தாக்கவில்லை

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எவரையும் தாக்கவில்லை - குற்றத்தடுப்புப் பிரிவு

by Staff Writer 04-01-2019 | 2:43 PM
Colombo (News 1st) தெமட்டகொட பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையிடப்பட்ட போதிலும், தாக்குதல் தொடர்பில் சிசிடிவி காட்சிகளில் பதிவாகவில்லை என, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு இன்று (04)  நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அர்ஜூன ரணதுங்க, மனுதாரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை நிரூபணமாகவில்லை எனின் அவருக்கு எதிராக ஏன் வழக்கு தொடரப்பட்டது என நீதவான் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார். அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தாக்குதல் நடத்தவில்லை என்றபோதிலும், மனுதாரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்புப் பிரிவு மன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், மனுதாரர் மீது தாக்குதல் நடாத்தியது யார், எந்தப் பகுதியில் என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தாக்குதல் மேற்கொள்ளவில்லை எனின், அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான முழுமையான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு பிரதம நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, வழக்கு விசாரணை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.