சிங்கப்பூர்-இலங்கை உடன்படிக்கை: முக்கிய விடயங்கள்

சிங்கப்பூர் - இலங்கை உடன்படிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் முக்கியமான விடயங்கள்

by Staff Writer 03-01-2019 | 10:05 PM
Colombo (News 1st) சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் முக்கியமான பல விடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த உடன்படிக்கை வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பத்தில், உத்தேச வர்த்தக உடன்படிக்கை இலங்கையின் தேசிய வர்த்தக கொள்கைக்கு அமையவாக தயாரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார். எனினும், அத்தகைய கொள்கையொன்று நாட்டில் இல்லை என அப்போதைய அமைச்சரவை பேச்சாளர் பகிரங்கமாக அறிவித்தார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பட்டபோது, சர்வதேச வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள் அமைச்சர் "புதிய வர்த்தக கொள்கை" எனும் பெயரில் அவசர அவசரமாக ஆவணமொன்றை பிரசுரித்து அதன்மூலம் உடன்படிக்கை தயாரிக்கப்பட்டதாக எடுத்தியம்புவதற்கு முயன்றார். எவ்வாறாயினும், "புதிய வர்த்தக கொள்கை" ஆய்வு அறிக்கையேயொழிய அது எந்த வகையிலும் தேசிய வர்த்தக கொள்கையாக கருதும் மட்டத்திலான ஆவணம் அல்லவென இந்த உடன்படிக்கை தொடர்பில் ஆராய்ந்த நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இந்த ஆவணம் வேறு தேசிய கொள்கைகளுடன் தொடர்புபடாத வெறும் ஆவணம் மாத்திரமே எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தை 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சர்வதேச நாடுகள் தொடர்புபடுகின்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் அவசியம் தேவைப்படுகின்றபோதிலும் அபிவிருத்தி மூலோபாயங்கள் அமைச்சர், அங்கீகாரத்தை எதிர்ப்பார்த்து அமைச்சரவைப் பத்திரத்தை 2017 ஆம் ஆண்டு ஜுலை 4ஆம் திகதி சமர்ப்பித்த சந்தர்ப்பத்தில் 5 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்திருந்தன. அவ்வாறாயின் எவ்வித சட்டபூர்வ அங்கீகாரமும் இல்லாத நிலையிலேயே இந்த விடயம் தொடர்பிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையின்படி, உத்தேச இறுதி சட்டமூலம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார். எனினும், உடன்படிக்கையின் சில நிபந்தனைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஜனவரி 12 ஆம் திகதி மாலை 4.45 ஆகும்போதும் நடைபெற்றுவந்தமை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை மூலம் நிரூபனமாகியுள்ளது. முழுமைப்படுத்தப்படாத ஆவணமொன்றே இறுதி சட்டமூலம் என்ற பெயரில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை இதன்மூலம் உறுதியாகியுள்ளது. இத்தகைய பாரதூரமான குறைபாடுகள் திட்டமிட்ட வகையில் அல்லது கவனயீனத்தால் இழைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள் அமைச்சர் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேள்வி: சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பில் அறிக்கையை வாசித்ததன் பின்னர் வேறு ஒருநாளில் நாம் கலந்துரையாடுவோம். நேற்றைய தினமே எனக்கு அறிக்கை கிடைத்தது. அது குறித்து ஆராய்ந்ததன் பின்னர் அடுத்த வாரம் நாம் கலந்துரையாடலை நடத்துவோம் என அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.