by Staff Writer 02-01-2019 | 4:22 PM
நாட்டில் பிரிவினை இன்றிய சமூகத்தை உருவாக்குவதாக, பிரேஸிலின் புதிய ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ (Jair Bolsonaro) உறுதியளித்துள்ளார்.
ஊழல், குற்றங்கள் மற்றும் தவறான பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கு தேசிய ஒப்பந்தமொன்றும் அவசியம் எனவும் புதிய ஜனாதிபதி கூறியுள்ளார்.
சட்ட ஒழுங்கு மற்றும் அபிவிருத்தி என்பதே நாட்டின் கோட்பாடாக உள்ள நிலையில், அதனை மீறி எவரும் செயற்பட இயலாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக ஜெய்ர் பொல்சொனாரோ நேற்று பதவியேற்றார்.
பதவியேற்பு நிகழ்வில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, ஹங்கேரி ஜனாதிபதி விக்டர் ஓர்பன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி நடைபெற்ற இரண்டாம் கட்ட ஜனாதிபதித் தேர்தலில், ஜெய்ர் பொல்சொனாரோ 55 வீத வாக்குகளால் வெற்றிபெற்றார்.
63 வயதான ஜெய்ர் பொல்சொனாரோ, முன்னாள் இராணுவத் தளபதியான பிரேஸில் ஜனாதிபதி , ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், அமெரிக்கா எப்போதும் உங்களுடன் என்ற பதிவையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், ஜெய்ர் பொல்சொனாரோவின் பதவியேற்பு உரை தொடர்பிலும் அமெரிக்க ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.