கங்காருகளை வீழ்த்திய இந்தியா

கங்காருகளை வீழ்த்திய இந்தியா

கங்காருகளை வீழ்த்திய இந்தியா

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2019 | 8:52 pm

வரலாற்றில் முதல் தடவையாக அவுஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரொன்றை வெற்றிகொண்டது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என கைப்பற்றியதன் மூலம் இந்தியா இந்த சிறப்பை பெற்றது.

சிட்னியில் நடைபெற்ற போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை நிறுத்தியது.

போட்டியின் நேற்றைய 4ஆம் நாளில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 300 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்ததுடன், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது 30 வருடங்களின் பின்னர் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியா, டெஸ்ட் ​இன்னிங்ஸ் ஒன்றில் பலோ ஒன்னில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும்.

எவ்வாறாயினும் அவுஸ்திரேலியா, விக்கெட் இழப்பின்றி 6 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் நேற்றைய நான்காம் நாள் ஆட்டமும் மழையால் தடைப்பட்டது.

இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டமும் மழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியற்ற முடிவை எட்டியதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதன்படி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2 – 1 என இந்தியா வசமாக , அவுஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல்தடவையாக டெஸ்ட் தொடரொன்றை கைப்பற்றிய பெருமையை பெற்றது.

அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரொன்றை வெற்றிகொள்ளும் முதல் ஆசிய அணி இந்தியா என்பதுடன், முதல் ஆசிய தலைவரும் விராட் கோஹ்லி ஆவார்.

அவுஸ்திரேலிய மண்ணில் இதற்கு முன்னர் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்தியதீவுகள் உள்ளிட்ட அணிகள் மாத்திரமே டெஸ்ட் தொடரொன்றை கைப்பற்றியுள்ளன.