பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை தளர்த்தல்

பிலிப்பைன்ஸில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்த்தல்

by Staff Writer 29-12-2018 | 3:08 PM
பிலிப்பைன்ஸின் தெற்குப் பிராந்தியத்தில் உள்ள மின்டானோ தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது. 6.9 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியதுடன், இதன்காரணமாக பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா மற்றும் பாலு ஆகியவற்றின் கரையோரங்களில் சிறியளவிலான சுனாமி அலைகள் எழக்கூடிய சாத்தியமுள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்திருந்தது. இருப்பினும், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷிய கரையோரங்களில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் எனவும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் குறிப்பிட்டிருந்தது. இந்தநிலையில், குறித்த எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிலிப்பைன்ஸின் ஜென்ரல் சன்ரோஸ் நகருக்கு கிழக்காக 193 கிலோமீற்றர் தூரத்தில், பூமிக்கடியில் 60 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிசரிதவியல் ஆய்வுமையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் எவையும் இதுவரை வௌியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.