by Staff Writer 28-12-2018 | 7:35 PM
Colombo (News 1st) அனர்த்த நிலை தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (28) கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அனர்த்தநிலை தொடர்பான விசேட கூட்டத்தில் கலந்துகொண்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் இதன்போது வரிவாக கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறினார்.
பிரதமருடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தற்போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆரம்பக்கட்ட நிவாரணமான தலா 10,000 ரூபா நிதியையும் பிரதமர் இன்று வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சில பகுதிகளையும் பிரதமர் சென்று பார்வையிட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வட மாகாணத்தில் தற்போது சீரான வானிலை நிலவுகின்றது.
எனினும், கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடனான வானிலை காரணமாக வட மாகாணத்தில் 38,209 குடும்பங்களைச் சேர்ந்த 1,18,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட 2,827 குடும்பங்களைச் சேர்ந்த 8,983 பேர் 27 தற்காலிக முகாம்களில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மழை வௌ்ளத்தால் 170 வீடுகள் முழுமையாகவும் 3,506 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டமே மழை வௌ்ளத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டது.
எனினும், முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது வௌ்ளநீர் வடிந்தோடி வருவதுடன், மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பியவண்ணமுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதேநேரம், இரத்தினபுரி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.