அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – வே. இராதாகிருஷ்ணன்

அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – வே. இராதாகிருஷ்ணன்

அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – வே. இராதாகிருஷ்ணன்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2018 | 6:57 pm

Colombo (News 1st) மக்களுக்கு சேவையாற்றக்கூடிய வகையில் அமைச்சுப்பதவி கிடைக்காவிடின், அமைச்சுப் பதவியினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப்பதவி தொடர்பில் அவரால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையின்போது, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்கியிருந்ததாகவும் வே. இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் குழப்பநிலையின்போது, தமக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியையும் பிரதியமைச்சுப் பதவியொன்றையும் மலையக மக்கள் முன்னணிக்கு வழங்குவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே கூறியிருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், தமக்கு கல்வி இராஜாங்க அமைச்சையும் இந்துமத விவகார அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சையும் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமாருக்கு பிரதி அமைச்சு பதவியையும் வழங்குமாறு கடிதம் ஒன்றினூடாக கோரப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

எனினும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பதவியையும் அரவிந்தகுமாருக்கு பிரதி அமைச்சு பதவியும் வழங்குவதாக பிரதமர் தெரிவித்திருந்தததையும் ஏற்றுக்கொண்டதாக வே. இராதாகிருஸ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போது இந்த விடயம் தொடர்பில் இழுபறிநிலை காணப்படுவதாகவும் புதிய அமைச்சு ஒன்றை உருவாக்கி தனக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இதே சந்தர்ப்பத்தில், எதிர்க்கட்சியுடன் இணையாது, தமது ஆதரவைத் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சிக்கே வழங்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சராக இருந்து அதன் பயன்களை அனுபவிப்பதை விட அதனூடாக மக்களுக்கு சேவையாற்றுவதே தமது நோக்கம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஸ்ணன் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்