சண். குகவரதன் பிணையில் விடுவிப்பு

மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் பிணையில் விடுவிப்பு

by Staff Writer 27-12-2018 | 4:47 PM
Colombo (News 1st) காசோலை மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன், நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், தலா 25 மில்லியன் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கல்கிஸை நீதவான் லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் மற்றும் அவரின் மனைவி ஆகியோருடைய வௌிநாட்டு கடவுச் சீட்டுகளை நீதிமன்றம் இன்று பொறுப்பேற்றுள்ளது. மனுதாரரால் கோரப்பட்ட 67.5 மில்லியன் ரூபா பணத்தில் 57.5 மில்லியன் ரூபா பணத்தை மீள செலுத்துவதற்கு சந்தேகநபர் நீதவான் முன்னிலையில் ஒப்புதல் வழங்கியுள்ளார். அதில் இன்றைய தினம் ஒரு மில்லியன் ரூபா பணத்தை செலுத்துவதாகவும் அறிவித்த சந்தேகநபர், மிகுதிப் பணத்தை தவணை அடிப்படையில் செலுத்த இணக்கம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி 10 மில்லியன் ரூபாவும் எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி 26.5 மில்லியன் ரூபாவையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 மில்லியன் ரூபா பணத்தையும் திருப்பிச்செலுத்துவதற்கு சந்தேகநபர் இணக்கம் தெரிவித்துள்ளார். இவற்றை பெற்றுக்கொண்டதன் பின்னர் எஞ்சிய 10 மில்லியன் ரூபாவை பெறுவதற்கு மாவட்ட நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். பண மோசடி தொடர்பில் மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 720 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி தொடர்பிலான விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.