சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு ஆலோசனை

போதைப்பொருள் கடத்தல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 27-12-2018 | 6:43 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளை ​மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் சட்டத்தை செயற்திறனுடனும் கடுமையாகவும் நடைமுறைப்படுத்த தேவையான அதிகாரங்களை உரிய பிரிவுகளுக்கும் அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு தேவையான சட்டமூலங்களை உருவாக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் திணைக்களம் தேசிய பாதுகாப்புப் பிரிவின் கீழ் கொண்டுவந்ததன் பின்னர் கடந்த 2 மாதங்களுக்கும் அதிக காலத்தில் சட்டவிரோத போதைப்பொருட்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணக்கூடியதாக உள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 2 மாத காலத்தில் 280 கிலோகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் 15,530 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் அச்சுறுத்தலற்ற தலைமுறையை உருவாக்குவதற்காக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் இதுவரை விரிவான பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.