அனாக் க்ரகடோ எரிமலை சீற்றம் அதிகரிப்பு

இந்தோனேஷியாவின் அனாக் க்ரகடோ எரிமலை சீற்றம் அதிகரிப்பு

by Staff Writer 27-12-2018 | 10:08 PM
இந்தோனேஷியாவின் அனாக் க்ரகடோ எரிமலை சீற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட எச்சரிக்கை இரண்டாவது அதிகூடிய மட்டத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சீற்றம் அதிகரித்துள்ளதால் குறித்த பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 5 கிலோமீற்றர் பகுதி அபாய வலயமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அத்துடன், எரிமலை வழியாக பயணிக்கும் விமானப் பாதைகளும் மாற்றப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட எரிமலைக் குமுறலினால் இந்தோனேஷியாவின் சுண்டா நீரிணைப் பகுதியில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்தது. இந்த ஆழிப்பேரலையில் சிக்கி குறைந்தது 430 பேர் உயிரழந்துள்ளதுடன், 159 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, 1,500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், பெருமளவிலான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன. மேலும், ஆழிப்பேரலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கிடையில் உள்ள சுண்டா நீரிணை பகுதியில் கடந்த 22 ஆம் திகதியன்று சுனாமி ஏற்பட்டது. க்ரகடோ (Krakatoa) எரிமலை வெடிப்பால், கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கமே இந்த ஆழிப்பேரலை ஏற்படுவதற்கான பிரதான காரணமாக இருக்கலாமென இந்தோனேஷிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.