சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல்: ரஷ்யா கண்டனம்

சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்: ரஷ்யா கண்டனம்

by Staff Writer 26-12-2018 | 10:15 PM
சிரியா மீதான இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலுக்கு, ரஷ்யா கண்டனம் வௌியிட்டுள்ளது. இதுவொரு கோபமூட்டும் செயற்பாடு எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவின் டமாஸ்கஸ் நகர் மீது, இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும், தம்மைத் தாக்கவந்த ஏவுகணைகளை வீழ்த்தும் நோக்கில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸிலுள்ள இராணுவ தளத்தின் மீது இஸ்ரேல், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக சிரிய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் குறித்த இராணுவத் தளம் சேதமானதாகவும் 3 வீரர்கள் காயமடைந்ததாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேலிய அரசு மறுத்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், சிரியாவிலிருந்து தங்கள் நாட்டை தாக்கவந்த ஏவுகணைகளை டமாஸ்கஸ் அருகே வழிமறித்து சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் கடந்த சில வருடங்களில், இஸ்ரேல் பல ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.