1,000 ரூபாவை வழங்கினால் கம்பனிகள் வீழ்ச்சியடையும்

1,000 ரூபாவை வழங்கினால் கம்பனிகள் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும் - அமைச்சர் நவீன் திசாநாயக்க

by Staff Writer 25-12-2018 | 8:35 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பற்கு கலந்துரையாடி சமநிலையான தீர்வொன்றை எட்டவுள்ளதாக, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
மக்கள் பக்கம் இருந்து பார்க்கும்போது 1,000 ரூபாவை வழங்குவது அவசியமாகும். எனினும், மற்றைய பக்கம் கம்பனிகள் 1,000 ரூபாவை வழங்கினால் பொருளாதார ரீதியில், கம்பனிகள் வீழ்ச்சியடையும். ஒருபுறம் மக்கள் தொடர்பிலும் அவதானிக்க வேண்டும். மறுபுறம் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பிலும் அவதானிக்க வேண்டும். 22 கம்பனிகள் வீழ்ச்சியடைந்தால், 5 இலட்சம் ஊழியர்களுக்கு என்ன நேரும் என்பதையும் பார்க்க வேண்டும். அனைத்தும் ஒரே கலவையாகும். தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதுடன், முதலாளிமாரின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, அவர்களுக்கும் நீண்ட கால திட்டமொன்று அவசியமாகும். கலந்துரையாடி சமநிலையான தீர்வொன்றுக்கு வருவதற்கு நாம் எண்ணியுள்ளோம்
என அமைச்சர் நவீன் திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.