வடக்கில் 11,310 பேர் தொடர்ந்தும் முகாம்களில்

வடக்கில் 11,310 பேர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில்

by Staff Writer 25-12-2018 | 10:07 AM

வடக்கில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 11,310 பேர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

39  இடைத்தங்கல் முகாம்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. கிளிநொச்சியில் 24 முகாம்களிலும், முல்லைத்தீவில் 13 முகாம்களிலும், மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா ஒவ்வொரு முகாம்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பிரதேச செயலகங்களூடாக விநியோகிக்கப்படுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. வட மாகாணத்தில் கடந்த நான்கு நாட்களாக நிலவிய சீரற்ற வானிலையால் 23,054 குடும்பங்களை சேர்ந்த 73,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வௌ்ளம் காரணமாக 26 வீடுகள் முழுமைாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் 316 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு சிறு வர்த்தக நிலையங்கள் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது. எனினும் சில பகுதிகளில் தொடர்ந்தும் வௌ்ள நீர் தேங்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.