வட மாகாணத்தில் 60,000க்கும் அதிகமானோர் நிர்க்கதி

60,000 பேரை நிர்க்கதிக்குள்ளாக்கிய வானிலை மாற்றம்

by Staff Writer 24-12-2018 | 7:53 PM

வடமாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் சில மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மூன்று நாட்களாக பெய்த பலத்த மழைக் காரணமாக கிளிநொச்சி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 11,688 குடும்பங்களை சேர்ந்த 3,8534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 28 முகாம்களில் நேற்று தங்கவைக்கப்பட்டிருந்தனர். தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் முகாம்களின் எண்ணிக்கை 20 ஆக குறைவடைந்துள்ளது. வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியூஸ்பெஸ்ட் குழுவினர் இன்று களவிஜயத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி ஐயங்கோவிலடி, சேற்றுகண்டி, நான்காம் கட்டை , பழையகாமம், வௌிக்கண்டல் மற்றும் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பாதிகப்பட்ட மக்கள் முரசுமோட்டை ஆரம்ப பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வௌ்ளத்தில் மூழ்கியுள்ள ஐயன்கோவிலடி கிராமத்தையும் எமது குழுவினர் சென்று பார்வையிட்டனர். தர்மபுரம் கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட 231 குடும்பங்களைச் சேர்ந்நத மக்கள் தர்மபுரம் சன சமூக நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பொன்நகர், ஆனந்தபுரம் கிழக்கு, இரத்தினபுரம் பன்னங்கண்டி, பாராதிபுரம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.   கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தருமபுரம், விசுவமடு, முரசுமோட்டை ,கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்தும் வௌ்ள நீர் தேங்கியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.   முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக நிலவிய சீரற்ற வானிலையால் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 520 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஆயிரத்து 200 குடும்பங்களை சேர்ந்த மூவாயிரத்து 365 பேர் 13 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. நேற்றைய தினம் 28 இடைத்தங்கல் நிலையங்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் முகாம்களின் எண்ணிககை 13 ஆக குறைவடைந்துள்ளது. முல்லைத்தீவு புதுகுடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம், வள்ளுவர்புரம், மாணிக்கபுரம், இளங்கோபுரம், தேவிபுரம்,கைவேலி உள்ளிட்ட பகுதிகள் தொடர்ந்தும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.   இந்த மக்கள் வல்லிபுனம் மகா வித்தியாலயம் மற்றும் சுதந்திரபுரம் பாடசாலை மற்றும் மாணிக்கபுரம் பாரதி வித்தியாலயம் உள்ளிட்ட பத்து இடைத்தங்கல் முகாம்களில் தங்ககை்கப்பட்டுள்ளனர். ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பண்டாரவன்னி, பேராறு, முத்துவிநாயகபுரம், முத்தையன்கட்டு உள்ளிட்ட பகுதிகளும் மழை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று இடைத்தங்கள் நிலையங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர கிராமங்களான செல்வபுரம், முள்ளிவாய்க்கால் பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கரையோர பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். மன்னார் மாவட்டத்தல் இடைக்கிடை மழை பெய்துவருவதாக எமது செய்தியாளர் கூறினார். மன்னார் - செல்வேரி கிராமத்தில் பாதிக்கப்பட்ட 38 குடும்பங்களை சேரந்த மக்கள் கடந்த மூன்று நாட்களாக பொதுமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனினும் குறித்த கிராமத்தில் தொடர்ந்தும் வௌ்ள நீர் காணப்படுகின்றது. வவுனியா மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்து வருவதுடன், 281 பேர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.