வடக்கில் தொடர்ந்தும் மழை: 60,000க்கும் அதிகமானோர் பாதிப்பு
by Chandrasekaram Chandravadani 24-12-2018 | 1:30 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 60,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்கள் முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வட மாகாணத்தில் சில மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்து வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை முதல் மழை பெய்து வருகின்றது.
கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 38,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வௌ்ளத்தில் பாதிக்கப்பட்ட 6,882 பேர் 20 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளே மழை வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வெள்ள நிலைமையை ஆராய்வதற்காக பொது நிர்வாகம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்.
அமைச்சர் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் விசேட கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்த விசேட கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்டஅரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், மாவை. சேனாதிராஜா, சாந்தி சிறீஸ்கந்தராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்து வருகின்றது.
கடந்த 3 நாட்களாக நிலவிய சீரற்ற வானிலையால் மாவட்டத்தில் 6,520 குடும்பங்களை சேர்ந்த 20,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 1,200 குடும்பங்களை சேர்ந்த 3,365 பேர் 13 இடைத்தங்கல் நிலையங்களில் தங்கியுள்ளதாக
இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் இடைக்கிடையே மழை பெய்து வருகின்றதோடு, சீரற்ற வானிலையால் 708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்து வருவதுடன், 281 பேர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்திலும் சீரான வானிலை நிலவுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருவதுடன் சில பகுதிகளில் வௌ்ளநீர் தேங்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்வதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சீரற்ற வானிலைக் காரணமாக மன்னார் - புத்தளம் பழைவீதியின் எழுவான்குளம், சப்பாத்து பாலத்தினூடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைபட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு , கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் திருகோணமலை மாவட்டத்திலேயே அதிக மழைவீழ்ச்சியாக 95.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதேநேரம், உலுக்குளம் பகுதியில் 67 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் 16.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் மட்டக்களப்பில் 7.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.