வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பாதுகாப்பு அமைச்சு வழங்க நடவடிக்கை

by Staff Writer 23-12-2018 | 12:45 PM
Colombo (News 1st) கடும் மழை காரணமாக வட மாகாணத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணம் வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒலுமடு உள்ளிட்ட 2 நீர்த்தேக்கங்களின் அணைக்கட்டு உடைப்பெடுத்து ஏற்படவிருந்த பாரிய அழிவினைத் தடுப்பதற்கு கிளிநொச்சி பாதுகாப்பு சேவை தலைமையக அதிகாரிகளுக்கு இயன்றதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அப்பகுதிகளிலிருந்து வௌியேற்றி, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கும் மருத்துவ வசதிகளை வழங்குவதற்கும் இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து குறிப்பிட்டார். இதேவேளை, பாதுகாப்பு செயலணியின் ஆலோசனைக்கு ஏற்ப இடர்முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களை பெற்றுக்கொண்டு கடற்படையின் 9 டிங்கி படகுகளும் 6 நிவாரணக்குழுக்களும் அந்த பகுதிகளுக்கு அனுப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்தோடு, வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்த 103 பேரை கடற்படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுத்தனர். இவர்களில் கர்ப்பிணித் தாயொருவரும் அடங்குகின்றார். இரணைமடு, ஒட்டுசுட்டான், வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகைள முன்னெடுக்கவுள்ளதாகவும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.