வடக்கில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

by Staff Writer 22-12-2018 | 8:05 PM
Colombo (News 1st) வட மாகாணத்தின் சில பகுதிகளில் பதிவாகிய அதிகூடிய மழை வீழ்ச்சியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கில் சுமார் 5775-இற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். சீரற்ற வானிலையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2542 குடும்பங்களைச் சேர்ந்த 8369 பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் 22 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட வசந்தபுரம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பேராறு, மன்னா கண்டல், பண்டாரவன்னியன், கற்சிலைமடு, முத்தையன்கட்டு ஆகிய கிராமங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. வசந்தபுரம் கிராமத்தில் வௌ்ளத்தில் சிக்கியுள்ள 170 குடும்பங்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதி மக்கள் மன்னா கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பேராறு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகளை இராணுவத்தினர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் கிராம அமைப்புகள் வழங்கி வருகின்றன. வௌ்ளம் காரணமாக புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் பிரதான வீதியூடான போக்குவரத்து இன்று காலை தடைப்பட்டிருந்ததுடன், பின்னர் வழமைக்குத் திரும்பியது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தாழ்நிலப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. முத்தையன்கட்டு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படாத நிலையில், வான் பாய்ந்து கொண்டிருக்கின்றது. கேப்பாப்பிலவு - புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் கள்ளியடியில் வீதியை மேவி வௌ்ளம் பாய்வதால் இந்த வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. கேப்பாப்பிலவில் வீசிய கடும் காற்றினால் வீடொன்றின் கூரை அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பண்டாரவன்னியன் பகுதியில் தாழ்நிலப்பகுதியில் வசித்து வந்த மக்கள் இராணுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (21) முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 1347 குடும்பங்களைச் சேர்ந்த 4633 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனந்தபுரம், இரத்தினபுரம், பொன்னகர், வட்டக்கச்சி - மாயவனூர், சிவநகர், பன்னங்கண்டி, முரசுமோட்டை, கண்டாவளை உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் திருமுறிகண்டி இந்து வித்தியாலயம், செல்வபுரம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபம், கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை, இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. ஏ9 வீதியில் முறிகண்டி பகுதியில் வௌ்ளம் வீதியை மூடி பாய்ந்தமையால், சில மணித்தியாலங்கள் இந்த வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது. கனகாம்பிகை குளம் வான் பாய்கின்றமையால் இரணைமடு குளம், சாந்தபுரம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தின் - வடமராட்சி கிழக்கு பகுதியிலும் சீரற்ற வானிலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாழையடி, வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புகளில் வௌ்ளம் தேங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். பளை - தர்மங்கேணி பகுதியில், ஏ 9 வீதியில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால் சில மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். பளை பிரதேச சபையும், பிரதேச மக்களும் இணைந்து முறிந்து வீழ்ந்த மரத்தினை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ் - தொண்​டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்ததை அடுத்து நான்கு வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. தொண்டமனாறு கடல் நீரேரி பெருக்கெடுத்தமையால் அச்சுவோலி , வல்லை, புத்தூர் பகுதியினை சேர்ந்த 147 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். மன்னாரில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் - செல்வேரி கிராமத்தில் பாதிக்கப்பட்ட 38 குடும்பங்கள் பொதுமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன. மன்னார் - புத்தளம் வீதியில் பழைய எழுவான் குளம் வீதியூடாக பயணித்த பஸ் வௌ்ளத்தில் சிக்குண்டுள்ளது. இராணுவம், கடற்படையினர், பொலிஸார், அனர்த்த முகாமைத்துவத்தினர் இணைந்து வௌ்ளத்தில் சிக்குண்ட பஸ்ஸை மீட்டனர். இந்த பஸ்ஸில் பயணித்தவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை.