முறிகள் மோசடி விசாரணை: ஒவ்வொரு மாதமும் மீளாய்வு

முறிகள் மோசடி விசாரணை குறித்து ஜனாதிபதி தலைமையில் ஒவ்வொரு மாதமும் மீளாய்வு கலந்துரையாடல்

by Staff Writer 21-12-2018 | 7:25 PM
Colombo (News 1st) மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு தேவையான திட்டங்களை வகுப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோன்று, ஆழமான கணக்காய்வை தாமதமின்றி ஆரம்பிப்பதற்கும் இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு மாதமும் மீளாய்வு கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது. முறிகள் மோசடி தொடர்பான வழக்கு குறித்த திருத்த சட்டமூலத்திற்கு பாராளுமன்றக் குழுவில் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் சிங்கப்பூர் அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , அந்நாட்டு அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் ஜனாதிபதியுடனான இன்றைய கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது.