மஹிந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியுமா: சபாநாயகரின் தீர்மானத்தில் காலதாமதம்

by Bella Dalima 21-12-2018 | 9:52 PM
Colombo (News 1st) மஹிந்த ராஜபக்ஸவால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து இன்று தனது நிலைப்பாட்டினை அறிவிப்பதாக சபாநாயகர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இருப்பினும், இன்னும் கால அவகாசம் தேவை என இன்று சபாநாயகர் தெரிவித்தார். சபாநாயகர் தெரிவித்ததாவது,
பாராளுமன்றத்தில் சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரால் எதிர்க்கட்சித்தலைவர் பதவி தொடர்பில் 2018 டிசம்பர் 18 ஆம் திகதி செவ்வாயன்று முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் என்னுடைய கருத்தினை இன்று நான் முன்வைப்பதாகக் கூறியிருந்தேன். எனினும், பாராளுமன்ற குழு உறுப்பினர்கள், விசேட செயற்குழுவினை நியமிக்குமாறு எழுத்து மூலம் அறிவித்திருந்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவினால் இது தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் இன்று மற்றுமொரு கடிதத்தினை வழங்கியுள்ளமையாலும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் இந்த சபையில் முன்வைக்க எதிர்பார்க்கிறேன்.