இந்த வருடத்தின் இறுதி பாராளுமன்ற அமர்வு இன்று

இந்த வருடத்தின் இறுதி பாராளுமன்ற அமர்வு இன்று

இந்த வருடத்தின் இறுதி பாராளுமன்ற அமர்வு இன்று

எழுத்தாளர் Staff Writer

21 Dec, 2018 | 10:17 am

நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.30 அளவில் கூடியது.

இந்நிலையில், இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரச செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை, நிதி மற்றும்  ஊடக அமைச்சர் மங்கல சமரவீரவினால் நேற்று கூடிய புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நான்கு மாதங்களுக்கான அரசின் செலவீனங்களுக்காக ஆயிரத்து 765 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 970 பில்லியன் ரூபா நிதி, கடன் மற்றும் கடன் வட்டி தவணையை செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் முதல் நான்கு மாதங்களுக்கான செலவீனங்களில் 55 வீதம் அரச கடன் தவணை மற்றும் கடன் வட்டிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கம்பெரலிய, என்டர்பிரைஸ் ஶ்ரீ லங்கா , மற்றும் ஒரு கிராமத்திற்கு ஒரு திட்டம் என நிறுத்தப்பட்டிருந்த அனைத்து அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க இடைக்கால கணக்கறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் முதல் தவணை ஆரம்பமான பின்னர், 40 லட்சத்துக்கும் அதிக பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளுக்கான வவுச்சர்களை வழங்கவுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது.

2018 ஆம் ஆண்டின் இறுதி பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளதுடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்