10 மாதங்களில் 10 ஆண்டுகளுக்கான வேலையை செய்து காண்பிப்பேன்: சஜித் பிரேமதாச

by Bella Dalima 20-12-2018 | 8:41 PM
Colombo (News 1st) குறுகிய காலத்தில் மக்களுக்கான அதிக சேவையை நிறைவேற்றுவதில் தாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு தொடர்பில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று கருத்து வௌியிட்டார். பதவிப் பிரமாணம் செய்தவுடன் சஜித் பிரேமதாச அவரது அமைச்சுக்கு வருகை தந்திருந்தார். மத அனுஷ்டானங்களின் பின்னர் கடமைகளை ஆரம்பித்த அமைச்சர், முதலில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு நற்பெயரை ஈட்டிக்கொடுத்த, கட்டழகர் லூஷன் புஷ்பராஜுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கினார். இதன் பின்னர் சஜித் பிரேமதாச பின்வருமாறு தெரிவித்தார்,
எதிர்காலத்தில் காலை எட்டரை மணியிலிருந்து மாலை நான்கரை மணிவரை அல்ல. அனைவரும் 24 மணிநேரமும் நித்திரையின்றி கடமையாற்றத் தயாராகுங்கள். கட்டாயமாக நாம் இந்த அமைச்சில் சுழற்சி முறையிலான நேர அட்டவணைக்கு அமைய நித்திரையில்லாத அமைச்சாக இதனை மாற்றுவோம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக சுமார் 10 மாதங்களே உள்ளன. அந்த 10 மாதங்களில் அனைவரும் 10 மணித்தியாலம் கடமையாற்றத் தயாராகுங்கள். அவ்வாறு கடமையாற்றுபவர்களுக்கு என்னிடம் இடம் உள்ளது. அவ்வாறு கடமையாற்ற முடியாதவர்களுக்கு உண்மையிலேயே என்னிடம் கடமையாற்ற முடியாது. வாயால் மாத்திரமல்ல எனது செயலினாலும் 10 மாதங்களில் 10 ஆண்டுகளுக்கான வேலையை செய்து காண்பிப்பேன்.