மலையக இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வலுக்கிறது

by Staff Writer 20-12-2018 | 8:07 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை இழுத்தடிக்கப்படுகின்ற நிலையில், மலையக இளைஞர்கள் இருவர் ஆரம்பித்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கக் கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தன்னெழுச்சி மலையக இளைஞர்கள் இருவரே கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரு இளைஞர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில், பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுட்டுள்ளார். இதேவேளை, ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடினார். தமது உரிமைகளுக்காக அப்பாவி மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்ட சீலரத்ன தேரர், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் திகாம்பரம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதேவேளை, உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்திற்கு தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் நிர்வாக செயலாளர் வேலாயுதம் ருத்ரதீபன் இன்று பிற்பகல் வருகை தந்திருந்தார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.