நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது

by Staff Writer 20-12-2018 | 5:49 PM
Colombo (News 1st) எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நாளை (21) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரச செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை, நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று கூடிய புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதி பெறப்பட்டதாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நான்கு மாதங்களுக்கான அரசின் செலவீனங்களுக்காக 1765 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 970 மில்லியன் ரூபா நிதி, கடன் மற்றும் கடன் வட்டியினை செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க அடுத்த வருடம் முதல் நான்கு மாதங்களுக்கான செலவீனங்களில் 55 வீதமான நிதி கடன் மற்றும் கடன் வட்டிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கம்பெரலிய, தொழில்முயற்சி இலங்கை மற்றும் ஒரு கிராமத்திற்கு ஒரு திட்டம் என நிறுத்தப்பட்டிருந்த அனைத்து அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க இடைக்கால கணக்கறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் முதல் தவணை ஆரம்பமான பின்னர், 40 இலட்சத்திற்கும் அதிக பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளுக்கான வவுச்சர்களை வழங்கவுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.