விமான நிறுவன மோசடி:ஆணைக்குழு பதவிக்காலம் நீடிப்பு

விமான நிறுவன மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

by Staff Writer 19-12-2018 | 8:26 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் உறுப்பினர்களை ஜனாதிபதி இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிந்த பின்னர், பதவிக் காலத்தை நீடிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளார். 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் செயற்பட்ட ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ காலம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. 2019 பெப்ரவரி மாதம் 31 ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி இன்று தீர்மானித்தார்.