மகாவலி நெற்பயிர் செய்கை குறித்து ஜனாதிபதி ஆலோசனை

மகாவலி வலய நெற்பயிர் செய்கை குறித்து ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 19-12-2018 | 7:03 AM
Colombo (News 1st) மகாவலி வலயங்களில் நெற்பயிர்ச்செய்கையுடன் இணைந்ததாக உப உணவு பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் வகையிலான செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு மகாவலி அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். இலங்கை மகாவலி அதிகாரசபையின் பதவி உயர்வுகளுக்குரிய நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே, ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். மகாவலி வலயத்தில் உப உணவுப்பயிர்கள் பயிரிடப்பட்டு வந்தபோதிலும், தற்போது அவை அழிவடைந்துள்ளதுடன், அதிக செலவில் குறித்த உற்பத்திகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே, தேசிய உணவு உற்பத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்கக்கூடிய வகையில் மகாவலி வலயங்களில் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான புதிய விவசாய செயற்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பயிர்வகைகளை இயலுமளவில் பயிர்ச்செய்வதன் ஊடாக இறக்குமதிகளை மட்டுப்படுத்த முடியும் என்பதுடன் அதனால் ஏற்படக்கூடிய அதிக செலவினை விவசாயத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு உபயோகிக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கான சிறந்த பின்னணியாக அமையும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ். திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.