போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவு

நியூசிலாந்தில் 12 வருடங்களின் பின்னர் இலங்கை டெஸ்ட் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துள்ளது

by Staff Writer 19-12-2018 | 9:57 PM
Colombo (News 1st) நியூசிலாந்து மண்ணில் 12 வருடங்களின் பின்னர் இலங்கை டெஸ்ட் போட்டி ஒன்றை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது. இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சீரற்ற வானிலையால் தடைப்பட்டு இன்று வெற்றி தோல்வியற்ற முடிவை எட்டியது. வெலிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 282 ஓட்டங்களையும், நியூஸிலாந்து 578 ஓட்டங்களையும் பெற்றன. இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க மேலும் 37 ஓட்டங்கள் தேவையான நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 259 ஓட்டங்களுடன் இலங்கை இரண்டாம் இன்னிங்ஸை இன்று தொடர்ந்தது. குசல் மென்டிஸ் 116 ஓட்டங்களுடனும் அஞ்சலோ மெத்யூஸ் 117 ஓட்டங்களுடனும் இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர். இவர்கள் மிக நிதானமாக துடுப்பெடுத்தாடி இன்றும் நியூஸிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தனர் நான்காம் நாளான நேற்று முழுவதும் களத்தில் நின்று சாதித்த குசல் மென்டிஸ் மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் ஜோடி வீழ்த்தப்படாத நான்காம் விக்கெட்டில் 274 ஓட்டங்களைப் பகிர்ந்தது. இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 287 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டதுடன், அதன் பிறகு ஆட்டத்தைத் தொடர முடியவில்லை. இதனால் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடிவுக்குக் கொண்டு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர். குசல் மென்டிஸ் 141 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்யூஸ் 120 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். இது நியூஸிலாந்திற்கு எதிராக இவ்விருவரும் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். நியூஸிலாந்து மண்ணில் இறுதியாக 2006 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்ட இலங்கை அதன் பிறகு தற்போது இந்தப் போட்டியை அவ்வாறு முடித்துள்ளது. இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி க்ரைஸ் சர்ச்சில் ஆரம்பமாகவுள்ளது.