தங்கக்காலணி விருதை சுவீகரித்தார் லயனல் மெஸி

அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருதை சுவீகரித்தார் லயனல் மெஸி

by Staff Writer 19-12-2018 | 1:55 PM
ஐரோப்பாவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருதை, ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான லயனல் மெஸி, ஐந்தாவது தடவையாகவும் சுவீகரித்தார். இதன்மூலம் அதிக தடவைகள் இந்த விருதை வென்ற வீரராக லயனல் மெஸி வரலாற்றில் இணைந்தார். ஐரோப்பாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருதை போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஆர்ஜென்டினாவின் லயனல் மெஸியும் தலா 4 தடவைகள் வென்றிருந்தனர். இந்தநிலையில், இவ்வருட விருதை லயனல் மெஸி தன்வசப்படுத்தி அதிக தடவைகள் அந்த விருதை வென்றவராக வரலாற்றில் பதிவானார். இந்த வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய தமது அணியின் சக வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக லயனல் மெஸி கூறியுள்ளார். ஸ்பெயினின் லா லீகா கால்பந்தாட்டத் தொடரில் இந்தப் காலத்தில் 36 போட்டிகளில் விளையாடிய லயனல் மெஸி 34 கோல்களைப் போட்டுள்ளார். இவ்வருட விருது பட்டியலில் எகிப்தை சேர்ந்தவரும் லிவர்பூல் கழக அணிக்காக விளையாடுபவருமான மொஹமட் சாலா இரண்டாமிடத்தைப் பெற்றார். டொடன்ஹாம் கழகத்துக்காக விளையாடும் இங்கிலாந்தின் ஹெரி கேன் மூன்றாமிடத்தை அடைந்தார். யுவென்டஸ் கழகத்துக்காக விளையாடும் போர்த்துக்கல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இந்தப் பட்டியலில் நான்காமிடம் கிடைத்துள்ளது.