பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் பெல்ஜியம் பிரதமர் இராஜினாமா

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் பெல்ஜியம் பிரதமர் இராஜினாமா

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் பெல்ஜியம் பிரதமர் இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2018 | 5:04 pm

பெல்ஜியம் அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணிக்கட்சி விலக்கிக்கொண்டதையடுத்து, பிரதமர் சார்லஸ் மைக்கேல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

உலகளாவிய அகதிகள் குறித்த ஐ.நா ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, பெல்ஜியம் பிரதமர் சார்லஸின் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை புதிய பிளெமியம் கூட்டணி திடீரென வாபஸ் பெற்றது.

இதனால் பிரதமர் சார்லஸ் அரசு சிறுபான்மை அரசாக மாறியது. எனவே, அவர் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள விரும்பாத பிரதமர் மைக்கேல் தன் பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்தார்.

இதற்கிடையே, அகதிகள் குறித்த ஐ.நா ஒப்பந்தத்திற்கு எதிராக பிரசல்ஸ் நகரில் சமீபத்தில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றபோது மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் கலைத்தனர். அதன் பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மைக்கேல் தன் பதவியை இராஜினாமா செய்துள்ளார். மன்னர் பிலிப்பிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார். அவரது இராஜினாமாவை ஏற்பதா, இல்லையா என்பது குறித்து மன்னர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இருப்பினும், எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத் தேர்தல் வரை பதவியில் இருக்குமாறு பிரதமர் மைக்கேலை மன்னர் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்