கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: சாட்சியாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: சாட்சியாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: சாட்சியாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2018 | 9:19 pm

Colombo (News 1st) கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எதிர்வரும் 2 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ள கொமடோர் டிகே.பி தசநாயக்க மற்றும் கொமடோர் சுமித் ரணசிங்க ஆகியோர் தற்போது சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இதன் காரணமாக வழக்கின் பிரதான சாட்சியாளரான லெப்டினன்ட் கமாண்டர் சமிந்த வெலகெதர உள்ளிட்ட சாட்சியாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது கடற்படையின் புலனாய்வுப் பிரிவு உத்தியோகஸ்தர்கள் இருவர் நீதிமன்றத்திற்குள் அமர்ந்திருப்பதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த சில்வா நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக தமது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நிசாந்த சில்வா கூறியுள்ளார்.

இந்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரான கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்