மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க ஆட்சேபனை

by Staff Writer 18-12-2018 | 5:48 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஸவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார். எனினும், மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றுள்ளதால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதன்போது தெரிவித்தன. இது தொடர்பில் தனது தீர்மானத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) சபாநாயகர் அறிவிக்கவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை சந்தித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஸவை நியமிக்க வேண்டும் என தீர்மானித்தது. அதனைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரவின் கையொப்பத்துடனான கடிதத்தின் ஊடாக எழுத்து மூலம் சபாநாயகருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.