ரணிலை நியமித்தது ஏன்? - ஜனாதிபதி விளக்கம்

by Staff Writer 16-12-2018 | 9:41 PM

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஜனநாயகத்துக்கும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் மதிப்பளித்து ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்திலுள்ள 225 பேரும் கையொப்பமிட்டாலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என தாம் ஏற்கனவே வௌியிட்ட கருத்து தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு என்பதுடன் அதே நிலைப்பாட்டில் இன்றும் இருப்பதாக ஜனாதிபதி ​தெரிவித்துள்ளார். எனினும் பாராளுமன்ற சம்பிரதாயம் மற்றும் ஜனநயாகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க தீர்மானித்ததாக தெரிவித்துள்ளனார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் அங்கு வந்த ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் ஒருவரை பெயரிடும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு அல்லது நீதிமன்றத்திற்கு இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்குமாறு 117 பேர் பாராளுமன்றத்தில் வாக்களித்ததால் அந்தத் தீர்மானத்திற்கு தாம் இணங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கலைத்தமை, கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவந்தமை, பிரதமரை நீக்கியமை, புதிய பிரதமரை நியமித்ததை உள்ளிட்ட நடவடிக்கைகளை நாட்டின் சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்தே மேற்கொண்டதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.