ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

by Bella Dalima 15-12-2018 | 6:01 PM
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, ஆலையை ஆய்வு செய்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த பரிசீலனையை ஆய்வு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.