மூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை

ஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: மூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை

by Staff Writer 15-12-2018 | 9:22 PM
Colombo (News 1st) ஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மூன்றாவது தடவையாகவும் சாம்பியனானது. இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் இலங்கை வளர்முக அணி 3 ஓட்டங்களால் கடைசிப் பந்தில் வெற்றியீட்டியது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்முக அணி சார்பாக ஹசித போயாகொட 54 ஓட்டங்களைப் பெற்றார். செஹான் ஜயசூரிய 46 ஓட்டங்களையும் கமிந்து மென்டிஸ் 61 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை வளர்முக அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்களைப் பெற்றது. வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய வளர்முக அணி ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து சிரமத்திற்குள்ளானது. 83 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்களும் வீழ்த்தப்பட , இந்திய வளர்முக அணி தோல்வியின் பிடிக்குள் சிக்கியது. என்றாலும், அதிரடியாக விளையாடிய அணித்தலைவர் ஜெயந்த் யாதவ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் 85 பந்துகளில் 71 ஓட்டங்களை விளாசினார். ஷம்ஸ் முலானி 46 ஓட்டங்களைப் பெற்றார். இறுதி ஓவரில் இந்திய வளர்முக அணியின் வெற்றிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன், அந்த ஓவரின் முதல் 5 பந்துகளில் இந்திய அணியின் அடிட் செத் 02 சிக்சர்களை விளாசி நம்பிக்கையூட்டினார். எவ்வாறாயினும், கடைசிப் பந்தில் வெற்றிக்காக 6 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன், அந்த பந்தில் இந்திய வளர்முக அணியால் 3 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. போட்டியில் 3 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை வளர்முக அணி ஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் மூன்றாவது தடவையாகவும் சாம்பியனானது.