11 பேர் கடத்திக் கொலை: கடற்படை அதிகாரிகள் இருவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 14-12-2018 | 4:06 PM
Colombo (News 1st) 2008 - 2009 காலப்பகுதிக்குள் கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் 11 பேரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட கடற்படை உறுப்பினர்கள் இருவரும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடத்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் தொலைபேசியூடாக கப்பம் கோரியமை, கடத்தப்பட்டவர்களில் ஒருவரின் மனைவியை நாரம்மல பகுதிக்கு அழைத்து பலவந்தமாக 5 இலட்சம் ரூபா கப்பம் பெற்றுக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் உப்புல் சமிந்த எனும் கடற்படை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தவிர கடத்தப்பட்ட ஒருவரின் உறவினரை தம்பலகாமத்திற்கு அழைத்து ஆயுத முனையில் அச்சுறுத்தி 5 இலட்சம் ரூபா கொள்ளையடித்தமை மற்றும் கடத்தப்பட்ட 11 பேரை கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். கடத்திமை, சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை, கொலை சம்பவங்களுக்கு உதவி புரிந்தமை மற்றும் திட்டமிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் மற்றைய கடற்படை உறுப்பினரான சஞ்ஜீவ சேனநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ளன.