மஹிந்த ராஜபக்ஸவும் அமைச்சரவையும் தமது செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

by Bella Dalima 14-12-2018 | 5:57 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை இரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை மீண்டும் எதிர்வரும் ஜனவரி 16, 17, 18 ஆம் திகதிகளில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அத்துடன், மஹிந்த ராஜபக்ஸவும் அமைச்சரவை உறுப்பினர்களும் வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரை தமது செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெற்று தீர்ப்பு வௌியிடப்படும் வரை இடைக்காலத் தடை அமுலில் இருக்கும் எனவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மூன்று வாரங்களில் எழுத்து மூல சமர்ப்பனங்களை முன்வைக்குமாறும் முறைப்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமிற்கு பதிலாக, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் அவசியம் எனின், அது தொடர்பில் பிரதம நீதியரசரிடம் வேண்டுகோள் விடுக்குமாறு ஈவா வனசுந்தர பிரதிவாதிகளுக்கு அறிவித்ததுடன், அந்த கோரிக்கையை பிரதம நீதியரசரிடம் முன்வைக்குமாறு உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஈவா வனசுந்தர, புவனேக்க அலுவிஹாரே மற்றும் விஜித் மலல்கொட அகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.