பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

by Staff Writer 14-12-2018 | 7:35 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பையடுத்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. 13 உறுப்பினர்களைக் கொண்ட பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் அதிகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ளது. எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், 6 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தது. வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவாக வாக்களித்தனர். சுயேட்சைக்குழு சார்பில் தெரிவு செய்யப்பட்ட நால்வரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒருவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒருவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கமைய, வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 7 வாக்குகள் அளிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டது. வாக்கெடுப்பையடுத்து, கூட்டமைப்பிற்கும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.