விரிவாக ஆராய்ந்து உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுக

விரிவாக ஆராய்ந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

by Staff Writer 13-12-2018 | 3:56 PM
Colombo (News 1st) வௌிநாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடும் போது நாட்டிற்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்த பின்னர் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய, குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.ரி. கொடிகார குறிப்பிட்டார். தற்போது தாய்லாந்து மற்றும் பங்களாதேஷுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடுவதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அதனூடாக நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் தற்போது ஆராயப்படுவதாக எஸ்.ரி. கொடிகார தெரிவித்தார். இது குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தகம் தொடர்பில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.ரி. கொடிகார குறிப்பிட்டார். இந்த உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.