முல்லைத்தீவில் நிலக்கடலை செய்கை பாதிப்பு

முல்லைத்தீவில் சுமார் 700 ஏக்கர் நிலக்கடலை செய்கை பாதிப்பு

by Staff Writer 13-12-2018 | 7:14 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இம்முறை சுமார் 700 ஏக்கர் நிலக்கடலை செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரதான வருமானத்தை ஈட்டித்தரும் வளமாக விவசாயத்துறை விளங்குகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அதிகளவில் நிலக்கடலை செய்கை இம்முறை மேற்கொள்ளப்பட்டது. எனினும், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் நிலக்கடலை செய்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர். பயிர் பூக்கும் நேரத்தில் மழை நீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனால் இம்முறை நட்டம் ஏற்படும் எனவும் விவசாயிகள் விசனம் வௌியிட்டனர். எனினும், பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மீண்டும் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எஸ். உலகநாதன் குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக நாவிதன்வெளி பகுதியில் பெரும்போக நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாவிதன்வெளி பகுதியில் நெற்செய்கையை ஜீவனோபாயமாகக் கொண்ட சுமார் 700 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். தற்போது பெரும்போக நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையால் குறித்த குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.