ஐ.தே.க-வை பாதுகாக்கும் த.தே.கூ: அரசியல் பிரமுகர்கள் குற்றச்சாட்டு

by Staff Writer 13-12-2018 | 8:46 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்கும் விதமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் காணப்படுவதாக அரசியல் பிரமுகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க பிரதமராக செயற்படுவதற்கு பாராளுமன்றத்தில் உச்சபட்ச நம்பிக்கை காணப்படுவதாக நேற்று (12) சமர்பிக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியினர் தமது எதிர்ப்பினை வௌியிட்டனர். பிரதமர் பதவிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர் ஒருவரே தகுதியானவர் எனவும் தம்மிடமே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை காணப்படுவதாகவும் ஐக்கிய தேசிய முன்னணி கூறி வந்தது. இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாக கடந்த மாதம் 29ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அறிவித்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடியவர் என கருதும் ஐக்கிய தேசிய முன்னணியால் பிரேரிக்கப்படுபவரை பிரதமராக நியமிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு வலியுறுத்தியது. எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவே தமது கட்சியால் பிரதமர் பதவிக்கு பிரேரிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடந்த 30 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 29 ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் நன்றி தெரிவிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்கும் முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாது என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த 26 ஆம் திகதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.