பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு இடைக்கால தடை: மேன்முறையீட்டு மனுவை ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு கோரிக்கை

பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு இடைக்கால தடை: மேன்முறையீட்டு மனுவை ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2018 | 8:03 pm

Colombo (News 1st) பிரதமர் மற்றும் அமைச்சரவையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு இன்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலர் நகர்த்தல் பத்திரம் ஊடாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக செயற்படுவதைத் தடுக்கும் வகையிலும், அமைச்சரவை செயற்படுவதை தடுக்கும் வகையிலும் கடந்த 3 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தது.

இந்த இடைக்காலத் தடையுத்தரவிற்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 49 பேர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு நாளை (14) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன மற்றும் L.T.B. தெஹிதெனிய ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரிக்கவுள்ளது.

இந்த மனுவை ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமது தரப்பிற்கு நீதியான உத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நகர்த்தல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்