மூதூர் விபத்தில் 2 பிள்ளைகளின் தந்தை பலி: பொதுமக்கள் - பொலிஸார் இடையே முறுகல்

by Staff Writer 12-12-2018 | 6:37 PM
Colombo (News 1st) திருகோணமலை - மூதூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தை அடுத்து குறித்த பகுதியில் நேற்றிரவு பதற்றம் ஏற்பட்டது. திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் மூதூர் பெரியபாலத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மணல் லொறி ஒன்று துவிச்சக்கரவண்டி மீது மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர் . மூதூர் ஆலிம் நகரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 28 வயதுடைய எம். மஹ்சூன் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். இதன் பின்னர் மணல் லொறியின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, பதற்ற நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து மூதூர் பெரிய பாலம் பகுதியில் ஒன்றுதிரண்ட பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் டயர்களை எரித்து எதிர்ப்பை வௌியிட்டதுடன், பொலிஸ் காவலரணையும் சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தை அடுத்து திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் இரண்டரை மணி நேரம் தடைப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு திருகோணமலையிலிருந்து விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டதையடுத்து, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.​ மூதூர் தள வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட லொறியின் சாரதி எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூதூர் பகுதியில் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.