மாநிலத் தேர்தலில் பாஜக பின்னடைவு

மாநிலத் தேர்தலில் பாஜக பின்னடைவு; வெற்றிப் பாதையில் காங்கிரஸ்

by Bella Dalima 12-12-2018 | 7:27 PM
மாநிலத் தேர்தலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்சிக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன், காங்கிரஸ் முன்னிலையிலுள்ளது. இந்தியாவின் 5 மாநில சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆட்சி செய்த 3 மாநிலங்களில் பின்னடைவை சந்தித்துள்ளது. சத்தீஷ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் ஆட்சியமைப்பதற்கு 60 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 87 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மிஸோரத்தில் 29 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட மிஸோ தேசிய முன்னணி ஆட்சியமைக்கவுள்ளது. மத்திய பிரதேஷில் காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கிடையேயான போட்டி தொடர்ந்து வந்த நிலையில், காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியபிரதேஷ் சட்டமன்றத்தில் காங்கிரஸ் 114 தொகுதிகளில் வெற்றியீட்டியுள்ளது. இந்நிலையில், மத்தியபிரதேஷில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியதிகாரத்தைப் பெறாமல் இருப்பதற்காக தாம் இந்த ஆதரவினை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, காங்கிரஸ் கட்சிக்கான தமது ஆதரவு, அது பெரும்பான்மையைப் பெறாமல் இருக்கின்ற இரண்டு மாநிலங்களுக்கும் வழங்கப்படும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேஷ் சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கு 2 ஆசனங்கள் குறைவாக உள்ளன. அந்த வகையில் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள பகுஜன் சமாஜ் கட்சி தமது ஆதரவை காங்கிரஸுக்கு வழங்கவுள்ள நிலையில், அது பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.