மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மனு மீதான விசாரணை ஜனவரி 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 12-12-2018 | 7:48 PM
Colombo (News 1st) மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக செயற்படுவதையும் அமைச்சரவையையும் ஆட்சேபித்து யாதுரிமை எழுத்தாணை உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை அடுத்த வருடம் ஜனவரி 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த சந்தர்ப்பத்தில், மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரை பிரதமர் மற்றும் அமைச்சரவை தமது பதவிகளில் செயற்படுவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தது. ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனு மீதான மேலதிக விசாரணைகளை அடுத்த வருடம் ஜனவரி 16, 17, 18 ஆம் திகதிகளில் மேற்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது. இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடையுத்தரவை வலுவிழக்கச் செய்யக் கோரி, மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 49 பேர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14) வரை ஒத்திவைக்க இன்று உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.