மஹிந்த ராஜபக்ஸவின்  மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

by Staff Writer 12-12-2018 | 4:26 PM
Colombo (News 1st) மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியை வகிப்பதற்கும் அமைச்சர்கள் தமது பதவிகளில் செயற்படுவதற்கும் இடைக்காலத்தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (14) வரை ஒத்திவைப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன மற்றும் L.T.B. தெஹிதெனிய உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மேன்முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஸ சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். இதன்போது, ரணில் விக்ரமசிங்க சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், விசாரணைகளில் ஆஜராவதற்கு பிரதிவாதிகளினால் அறிவித்தல் வழங்கப்படவில்லையென தெரிவித்தனர். இதற்கிணங்க மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.