மனிதப் புதைகுழியை சர்வதேசம் கவனிக்க வேண்டும்

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்: அனந்தி சசிதரன் வலியுறுத்தல்

by Staff Writer 12-12-2018 | 3:57 PM
Colombo (News 1st) மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் என ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.
21 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் பெறப்பட்டிருப்பது மக்கள் மத்தியிலும் அது தமிழர்களுடைய எலும்புக்கூடுகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த எலும்புக்கூடுகள் யாருடையது, எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை கண்டறிய வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. படைகள் இருந்த இடங்களை சோதனை செய்ய வேண்டிய அழுத்தத்தை அவை ஏற்படுத்தியிருக்கின்றன. உண்மையில் இந்த விடயத்தில் கூடுதலான கரிசனையுடன் சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டும். தென்னிலங்கையின் குழப்பத்திற்குள் இந்த விடயத்தை மறைத்து விடாமல், சர்வதேசம் தலையிட்டு இவ்வாறான பல மனிதப் புதைகுழிகள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றை எல்லாம் வௌிக்கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது.
என அனந்தி சசிதரன் குறிப்பிட்டார். மன்னார் - நானாட்டான் ஶ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலேயே அனந்தி சசிதரன் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.