தோட்டத் தொழிலாளர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

கடமைக்குத் திரும்புமாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

by Staff Writer 12-12-2018 | 9:57 PM
Colombo (News 1st) பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் வரை பணிப்பகிஷ்கரிப்பை நிறைவு செய்து, கடமைக்குத் திரும்புமாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்படும் தோட்டத்தொழிலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான இன்றைய சந்திப்பின் போது பணிப்பகிஷ்கரிப்பை நிறைவு செய்து கடமைக்குத் திரும்புமாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் ஜனாதிபதி கோரியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும் எனவும், தேயிலை தொழிற்துறையை முன்னேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.