கெமுனு படையணி சிப்பாய்க்கு விளக்கமறியல்

லக்பிம ஊடகவியலாளர் கொலை: கெமுனு படையணி சிப்பாய்க்கு விளக்கமறியல்

by Staff Writer 11-12-2018 | 4:16 PM
Colombo (News 1st) லக்பிம ஊடகவியலாளர் லக்மால் த சில்வா 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட இராணுவத்தின் கெமுனு படையணியின் சிப்பாயான சிந்தக வர்ணகுமார எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டு கல்கிசை மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான இராணுவத்தின் கெமுனு படையணியின் அப்போதைய லெப்டினன்ட் நிரோஷன் அந்தனி எனப்படும் சந்தேகநபர் வௌிநாடு சென்றுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மன்றுக்கு அறிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர் வௌிநாட்டிலிருந்து நாடு திரும்பும் போது கைது செய்யுமாறும், அவரை தடுத்து வைக்குமாறும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும் குறித்த சந்தேகநபருக்கு பிடியாணை பிறப்பித்துள்ள நீதிமன்றம், அவரை விரைவில் கைது செய்து மன்றில் ஆஜர்ப்படுத்த சர்வதேச பொலிஸின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டார். வழக்கு மீண்டும் எதிர்வரும் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி தெஹிவளை - ஜயவர்தன பகுதியில் ஊடகவியலாளர் சம்பத் லக்மால் சில்வாவின் சடலம் மீட்கப்பட்டது.