யானைகள் நடமாட்டத்தை அறிவிக்க குறுந்தகவல் சேவை

ரயில் மார்க்கத்திற்கு அருகில் யானைகள் நடமாட்டத்தை அறிவிக்க குறுந்தகவல் சேவை

by Staff Writer 11-12-2018 | 4:29 PM
Colombo (News 1st) ரயில் மார்க்கத்திற்கு அருகில் யானைகள் நடமாடுகின்றனவா என்பது தொடர்பில் குறுந்தகவல் மூலம் சாரதிகளுக்கு அறிவிக்கும் நடவடிக்கையை ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது. யானைகள் ரயிலில் மோதி உயிரிழப்பதைத் தடுப்பதற்கு பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் யோசனைகள் அமுல்படுத்தப்படும் வரை இந்த குறுந்தகவல் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. 24 மணித்தியாலங்களும் குறுந்தகவல் சேவை இடம்பெறும் என குழுவின் உறுப்பினரும் பொறியியலாளருமான இரோஷ் பெரேரா தெரிவித்தார். குறித்த குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவையின் அனுமதியைக் கோரியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 13 யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், யானைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். ரயில் மார்க்கத்தின் இருமருங்கிலும் 10 மீட்டர் வரை துப்புரவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.